சென்னை:

டந்த ஒரு வாரம் தொடர் விடுமுறையையொட்டி, சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்கள் கூட்டம் அலைமோதிய நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், வாகனங்களை நிறுத்துவற்கும் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஆனது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் 43ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 9ந்தேதி தமிழக முதல்வர் பழனிசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி நாளையுடன் (21ந்தேதி) முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் பொங்கல் விடுமுறையையொட்டி கடந்த ஒரு வாரமாக பள்ளிகள் மற்றும் அலுவலங்களுக்கு விடுமுறை விடப்பட்டால், புத்தகக் கண்காட்சியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகம் வாங்க குவிந்தனர்.

சிறுவர்களையும் படிக்கத் தூண்டும் சுவாரஸ்யமான கதை புத்தகங்கள், காமிக்ஸ், க்ரைம் நாவல்கள், பிரபல எழுத்தாளர்கள் எழுதிய நூல்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வேண்டிய ஏராளமான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.. மேலும்,  மொழி அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் ஏராளமான புத்தகங்கள், ஆங்கில இலக்கணம் சம்பந்தமான சிடிக்கள், இந்திய அரசியல், இதிகாச காவியங்கள், ஆன்மிகம், இயற்கை மற்றும் சித்த மருத்துவம் தொடர்பான புத்தகங்களும் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஏராளமானோர் தங்களுக்கு விரும்பிய புத்தகங்களை வாங்கிச்சென்றனர். நேற்று மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வாசகர்கள் சென்னை புத்தக்கண்காட்சியில் கூடினர். இதனால், சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெற்று வரும் அந்த பகுதியே திருவிழாக் கோலமாக காட்சி அளித்தது.

மேலும், அங்கு அமைக்கப்பட்டிருந்த கீழடி கண்காட்சியும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரும், கீழடி கண்காட்சியையும் கண்டு வியந்தனர்.