சென்னை: பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மெண்ட்  மெமு ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்யப்படுவ தாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த சேவை மே 2ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு தினசரி ஃபாஸ்ட் லோக்கல் மின்சார ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயில் காலை 6 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்டு காலை 9.30 மணிக்கு சென்னை கடற்கரை சென்றடையும். மறுமார்க்கமாக சென்னைக் கடற்கரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும். இந்த ரயில் வேலூர், காட்பாடி, முகுந்தராயபுரம், வாலாஜா சாலை, சோளிங்கர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் சென்னைக்கு வேலை, வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தினமும் இந்த ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ஃபாஸ்ட் லோக்கல் ரயிலாக இயக்கப்பட்டு வந்த ரயிலில் சாதாரண கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது.

ஆனால், கொரோனா காலத்தில் இந்த ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் பயணத்தை தொடங்கிய நிலையில், அதை விரைவு ரயிலாக ரெயில்வே அறிவித்து கட்டணத்தையும் உயர்த்தியது. இது ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தினாலும், இந்த ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இந்த ரயில் வரும் மே 2ந்தேதி முதல்  சென்னையில் இருந்து திருவண்ணாமலை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  அதாவது, சென்னை கடற்கரை – வேலூர் கண்டோன்மெண்ட் மெமு ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. வேலூர் கன்டோன்மென்ட்டுக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில், மே 2ம் தேதி முதல் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,   சென்னை கடற்கரையில் இருந்துமே 2ம் தேதி முதல் மாலை 6 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06033) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை இரவு 9.35 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

திருவண்ணாமலையில் இருந்துமே 3ம் தேதி முதல் அதிகாலை 4 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06034) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை அதிகாலை 5.40 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரைக்கு காலை 9.50 மணிக்கு அடையும் என தெரிவித்துள்ளது.

இதன் காரணமகா பொதுமக்கள் இனிமேல், திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு நேரடியாக பயணிக்கலாம்.