சென்னை: சென்னையின் மையப்பகுதியில் உள்ள அண்ணா மேம்பாலம் சிங்கம் சிலை உள்பட பல்வேறு கலையலங்காரத்துடன் ரூ.9 கோடி செலவில் புதுப்பிக்கப் படுகிறது. இதற்கான உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.

சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள அண்ணா மேம்பாலம், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில், 1971ம் ஆண்டு அடிக்கல் நாட்டப் பட்டு 1973ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பாலமானது, அந்த காலக்கட்டத்தில் பிரபலமான ஜெமினி ஸ்டூடியோ அருகே அமைந்திருந்ததால், இதை  ஜெமினி மேம்பாலம் என்றும் அழைப்பது வழக்கம்.

இந்த பாலமானது சென்னையின் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்து வரும் இந்த மேம்பாலமானது,  மயிலை ராதாகிருஷ்ணன் சாலை- திநகர் ஜி.என். ஷெட்டி சாலை- நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதியாக திகழ்கிறது. இந்த பாலத்தை புதுப்பித்து அழகுபடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டு இருப்பதாகவும், அதற்காக ரூ.9 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, மேம்பால சந்திப்பில் கதீட்ரல் ரோடு செல்லும் பகுதியில் பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட 6 அடி உயர சிங்கம் சிலை அழகிய வடிவமைப்புடன் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் ஒவ்வொரு நுழைவு பகுதி, வெளியேறும் பகுதி என 8 இடங்களில் அழகிய கல்தூண்கள் அமைக்கப்பட இருப்பதாகவும் அத்துடன்,  அண்ணா மேம்பாலத்தின் அருகே புல்தரைகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அழகிய தமிழ் எழுத்துக்கள் அமைக்கப்படவும் உள்ளது.

அங்குள்ள தூண்களில், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரது பொன்மொழிகளும் தூண்களில் செதுக்கப்பட இருப்பதாகவும், தமிழ் நாகரிகம், திராவிட அரசியலின் அடையாளங்கள் ஆகியவற்றை சிற்பங்களாகவும், ஓவியமாகவும் பிரதிபலிக்கும் வகையில் அழகிய வேலைப்பாடுகளும் மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.