சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு ஏற்கனவே இடப்பட்டிருந்த, அண்ணா, காமராஜர் பெயர்களை மீண்டும் இடம்பெற நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் கடுமையான போராட்டங்களை மத்தியஅரசு சந்திக்க நேரிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமான முனையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும், அயல்நாட்டு விமான முனையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயரும் சூட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அப்பெயர்கள் அகற்றப்பட்டுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழகத்தின் தனிப்பெரும் தலைவர்களாக இன்றைக்கும் விளங்குகிற பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பெயர்களை விமான நிலையங்களிலிருந்து அகற்றுவது தமிழக மக்களை அவமதிக்கிற செயலாகும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், மேம்பாட்டிற்காகவும் தமது வாழ்நாளை அர்ப்பணித்த இருபெரும் தலைவர்களின் புகழுக்குக் களங்கம் கற்பிக்கின்ற வகையில் அலட்சியப் போக்கோடு, சூட்டப்பட்ட பெயர்களை அகற்றிய மத்திய பா.ஜ.க. அரசு, உடனடியாக அந்த பெயர்கள் இடம் பெறுகிற வகையில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி திரும்ப பெயர்களை இடம் பெறச் செய்கிற வகையில் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கடுமையான போராட்டங்களை மத்திய பா.ஜக. அரசு சந்திக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Patrikai.com official YouTube Channel