சென்னை
சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்தச் சென்னை உயர்நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பார்முலா 4 கார் பந்தயம் நடக்க இருந்தது., இந்தியன் ரேசிங் லீக் போட்டி கார் பந்தயமும் நடக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கப்பட்டது. இந்த பந்தயம் சென்னை தீவுத் திடல் மைதானத்தைச் சுற்றி 3.5 கி.மீ வழித்தடத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டு இருந்தது. தீவுத் திடலில் தொடங்கி, ஃபிளாக் ஸ்டாஃப் சாலை, அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத்திடலில் முடிவடையும் வகையில் இந்த ரேஸ் சர்க்யூட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முதல்முறையாக இரவு நேரத்தில் நடக்கும் முதல் கார் பந்தயம் இதுவாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. கார் பந்தயம் நடத்தத் தமிழக அரசு ரூ.40 கோடியை ஒதுக்கியது., கார் பந்தயம் நடத்த அரசு 40 கோடி ரூபாயைச் செலவு செய்வது தவறு என்றும் சட்ட அனுமதியின்றி இந்த பந்தயம் நடத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொட்ரப்ப்பட்டது.. மேலும் இந்த பந்தயம் காரணமாக அரசுக்கு எந்த பலனும் லாபமும் இல்லை என்பதால் இந்த போட்டிக்குத் தடை விதிக்க வேண்டும் எனவு தெரிவிக்கப்பட்டது.
அரசு தரப்பில், கார் பந்தயம் நடத்துவது என அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதால் இதை நீதிமன்றம் ஆராய முடியாது எனவும் இந்த பந்தயத்திற்காக அரசு குறைவாகவே செலவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இன்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் , பார்முலா 4 கார் பந்தயம் நடத்தத் தடையில்லை என உத்தரவிட்டுள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசு பந்தயத்துக்காக அளித்த 42 கோடி ரூபாயை அரசுக்குத் திரும்பி அளிக்க வேண்டுமெனப் பந்தயம் நடத்தும் தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பந்தயத்திற்கான முழு செலவையும் தனியார் நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.