ராஜ்கோட்டில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதை போட்டியில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது வீரர் என்ற பெருமையுடன் இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அதேபோல், உலகளவில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

 

அஸ்வின் 98 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்தார் இதற்கு முன் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார். இவர்கள் இருவர் தவிர மற்ற ஏழு பந்துவீச்சாளர்களும் 100 போட்டிகளைக் கடந்த பின்பே இந்த சாதனையை எட்டிப்பிடித்தனர்.

ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் 500 விக்கெட் எடுத்து சாதனை படைத்த அஸ்வின் அதன் பின் சிறிது நேரத்தில் அஸ்வின் தனது தாயாருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசர சூழல் காரணமாக போட்டியில் இருந்து விலகி சென்னை திரும்பினார்.

பிறகு நான்காவது நாள் தேநீர் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ராஜ்கோட் சென்று இந்திய அணிக்காக மீண்டும் விளையாடிய அஸ்வின் இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட் எடுத்து தனது கணக்கை 501ஆக உயர்த்தியுள்ளார்.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதை அடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின் ரவிச்சந்திரனின் மனைவி பிரீத்தி நாராயணன், 500க்கும் 501 விக்கெட்டுக்கும் இடையிலான அந்த 48 மணி நேரம் குறித்து மனமுருக பதிவிட்டுள்ளார்.

“ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 500 விக்கெட் சாதனை நடைபெறும் என்று நினைத்தோம் அது நடக்கவில்லை. பிறகு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் சாதனை நிகழ்த்தப்படும் என்று இனிப்புடன் காத்திருந்து அப்போதும் அது நடக்காததால் வாங்கி வைத்த அத்தனை இனிப்புகளை வீட்டில் அனைவருக்கும் பகிர்ந்துகொண்டோம்”

ஆனால், “ராஜ்கோட்டில் அந்த 500வது விக்கெட் எடுத்த பின் நடந்ததோ விவரிக்க முடியாதது 500வது விக்கெட்டுக்கும் 501வது விக்கெட்டுக்குமான அந்த காலம் எங்கள் வாழ்வின் மிக நீண்ட 48 மணி நேரமாக இருந்தது

500க்கு முந்தைய 499 தந்த அந்த மகிழ்ச்சியை நினைத்து அஸ்வின் குறித்து பெருமைப்படுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.