சென்னை

சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததால் மூன்று வயது சிறுவன் மரணம் அடைந்தது தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த கோபால் என்பவரின் மகன் அபிமன்யு என்பவர் மூன்று வயதான சிறுவன் ஆவார்.  இவர் தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் முன்னால் உள்ள பெட்ரோல் டாங்கில் அமர்ந்து சென்றுக் கொண்டிருந்தார்.   ஆர் கே நகரில் உள்ள மீனாம்பாள் நகரில் உள்ள மேம்பாலத்தில் வண்டி சென்றுக் கொண்டிருந்த போது அறுந்த மாஞ்சா நூல் அபிமன்யு கழுத்தில் விழுந்தது.

அபிமன்யு

 

மாஞ்சா நூல் என்பது காற்றாடி விடும் போது நூல் கடினமாக ஆக்கப்படுவதற்காகக் கண்ணாடி தூள் போன்றவற்றைப் பூசி உருவாக்கப்படுகிறது.  அந்த நூல் கழுத்தை அறுத்ததால் அபிமன்யு மரணம் அடைந்தார்.  மாஞ்சா நூல் விற்பனை நகரில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.

 

ஆர் கே நகர் காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிந்து மாஞ்சா நூல் கொண்டு காற்றாடி விட்டவர்களை தேடி வந்தனர்.  இதில் அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் இந்த மரணத்துக்கு காரணமான மாஞ்சா நூலைப் பயன்படுத்திக் காற்றாடி செலுத்தியது கண்டறியப்பட்டது.

 

இதையொட்டி இந்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.  இந்த நால்வர் குறித்த விவரங்களை காவல்துறையினர் அறிவிக்கவில்லை.