சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 6ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்ட நிலையில், திடீரென நீர் திறப்பு 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. அடையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையிலும், ஏரியின் நீர் வரத்து குறைந்துள்ளதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு வென உயர்ந்துள்ளது. செம்பரப்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில், ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அளவானது முதலில் 1000 கன அடி என்ற அளவில் இருந்து நேற்று மாலை 6 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இதற்கிடையில் தொடர் மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சைதாப்பேட்டை, தி.நகர் பகுதிகளில் அதிக நீர் தேங்கியதற்கு காரணமாக, அடையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் என கூறப்பட்டது.
இந்த நிலையில், , தற்போது, திடீரென செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரிநீர் அளவு 4ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும், ஏரிக்கு வரும் நீர் வரத்து குறைந்துள்ளதால், நீர் திறப்பை 4 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை, மற்றும் அடையாறு ஆற்றின் கரையில் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதி வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது 22.53 அடி நீர்மட்டம் உள்ளது. 18.86 அடி உயரம் கொண்ட சோழவரம் ஏரியில் 17.64 அடி நீர் உள்ளது. 35 அடி கொண்ட பூண்டி ஏரியில் 31. 40 அடி நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் 20.31 அடியும் நீர் இருப்பு உள்ளது.