ம்பிகாபூர், சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் நகரில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

 

உலகெங்கும் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருகின்றன.   அவற்றை ஒழிப்பது மிகவும் கடினமாக உள்ளது.   பல நகரங்களில் பிளாஸ்டிக் உபயோகம் தடை செய்யப்பட்ட போதிலும் இந்த பிளாஸ்டிக் குப்பைகள் குறையவில்லை.   குப்பைகளில் கொட்டப்படும் இந்த பிளாஸ்டிக்கை மட்டும் பிரித்து எடுத்து விற்று பலர் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.   இது நாடெங்கும் உள்ள நிலை ஆகும்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூர் நகராட்சி உலகின் சுத்தமான நகராட்சி வரிசையில் 40 ஆம் இடத்தை பிடித்துள்ளது.  இந்திய அளவில் இந்த நகர் இரண்டாம் இடத்தில் உள்ளது.  இந்த  நகரிலும் பிளாஸ்டிக் குப்பைகள் ஏராளமாக சேர்ந்து விடுகின்றன.   இந்த நகராட்சியின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.  அந்த அறிக்கையில் இந்த பிளாஸ்டிக் குப்பை ஒழிப்பு குறித்து புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அதன்படி கார்பேஜ் கஃபே (குப்பை உணவு விடுதி) ஒன்று அம்பிகாபூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட உள்ளது.  இங்கு குப்பை பொறுக்குவோர் ஒரு கிலோ எடையிலான பிளாஸ்டிக் குப்பைகளை அளித்தால் அவர்களுக்கு ஒரு முழு சாப்பாடு வழங்கப்பட உள்ளது.   அதைப் போல் அரைக்  கிலோ பிளாஸ்டிக் அளிப்பவர்களுக்கு சிற்றுண்டி அளிக்கப்பட உள்ளது.

இவ்வாறு சேர்க்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளைக் கொண்டு இந்த நகரில்  சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.   இவ்வாறு ஏற்கனவே இந்நகரில் ஒரு சாலை வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது.   அத்துடன் இவ்வாறு குப்பை பொறுக்குவோருக்கு தங்க இடம் அளிக்கவும் நகராட்சி திட்டமிட்டுள்ளது.