ராய்பூர்
கொரோனா பரவல் காரணமாக காங்கிரஸ் தலைமையிலான சத்தீஸ்கர் மாநில அரசு புதிய தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும், நிறுத்தி உள்ளது.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலமும் ஒன்றாகும். இங்கு நேற்று வரை 8,83,210 பேர் பாதிக்கப்பட்டு அதில் 11,094 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று வரை இங்கு 7,49,318 பேர் குணம் அடைந்து 1,22,798 பேர் சிகிச்சையில் உள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
இம்மாநிலத்துக்கு புதிய தலைமைச் செயலகம், ஆளுநர் இல்லம், முதல்வர் இல்லம், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இல்லங்கள் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கட்ட காங்கிரஸ் தலைமையிலான அரசு திட்டமிட்டது. கொரோனா பரவலுக்கு முன்பே அதாவது 2019 ஆம் வருடம் நவம்பர் 25 ஆம் தேதி அன்று பூமி பூஜை நடந்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக தற்போது டில்லியில் இதே பாணியில் செண்டிரல் விஸ்தா என்னும் கட்டுமான திட்டத்தை நடத்தி வருகிறது. இங்கு புதிய நாடாளுமன்ற கட்டிடம்,, ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லங்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம் பெற உள்ளன. கொரோனா காலத்திலும் கட்டுமான பணிகள் நடப்பதால் அதற்கு தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இன்று சத்தீஸ்கர் மாநில முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபேஷ் பாகல், ”நமது குடிமக்களே நமது சொத்து. புதிய தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, முதல்வர் இல்லம், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் இல்லங்கள் என அனைத்து கட்டுமானங்களுக்கு கொரோனாவுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது கொரோனாவால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த பணிகள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் அனைத்து அரசுத் துறைகளுக்கும் புதிய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்கவும் இதற்காக அளித்துள்ள ஒப்பந்தப் புள்ளிகளை ரத்து செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் சத்தீஸ்கர் மாநில பொதுப்பணித்துறை அனைத்து கட்டுமானப் பணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பல கோடிக் கணக்கான மதிப்பிலான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளார். Corona,