டில்லி : ஆக்சிஜன் தேவை குறைந்ததால் அதிகப்படியை மற்ற மாநிலங்களுக்கு அளிக்க வேண்டுகோள்

Must read

டில்லி

டில்லியில் ஆக்சிஜன் தேவை தற்போது குறைந்துள்ளதால் அதிகப்படியாக உள்ள ஆக்சிஜனை மற்ற மாநிலங்களுக்கு அளிக்கத் துணை முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக இருந்ததால் மத்திய அரசிடம் தங்களுக்குத் தினசரி 700 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை என டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசு கோரிக்கை விடுத்தது.  ஆனால் அரசு அதற்கு குறைவான அளவில் ஆக்சிஜன் அளித்ததால் வழக்கு தொடரப்பட்டது.  டில்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கிணங்க ஆக்சிஜன் விநியோக அளவு அதிகரிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக டில்லியில் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.  முன்பு தினசரி பாதிப்பு சுமார் 28000 வரை சென்றநிலையில் தற்போது அது 10,400 எனக் குறைந்துள்ளது.   இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் எளிதாகக் கிடைக்கின்றன.  மேலும் ஆக்சிஜன் தேவையும் குறைந்துள்ளது.

டில்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, “இன்று கொரொனா நிலையை ஆய்வு செய்ததில் டில்லியில் ஆக்சிஜன் தேவை நாளொன்றுக்கு 582 மெட்ரிக் மின்னாகக் குறைந்துள்ளது தெரிய வந்தது.  ஒரு பொறுப்பான அரசு என்னும் முறையில் அதிகமாக உள்ள ஆக்சிஜனை அது தேவைப்படும் மற்ற மாநிலங்களுக்கு அளிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.

More articles

Latest article