புதுடெல்லி: இங்கிலாந்து நாட்டின் பட்டத்து இளவரசர் சார்லஸ், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக நவம்பர் 13ம் தேதி இந்தியா வரவுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்தின் பட்டத்து இளவரசராக இருப்பவர் சார்லஸ். இவர் தற்போது ராணி இரண்டாம் எலிசபெத்தின் மூத்த மகன். மேலும், மறைந்துபோன புகழ்பெற்ற இளவரசி டயானாவின் கணவருமாவார். இவர் தற்போது மறுமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹாரி ஆகியோரின் தந்தையாவார் இவர். இங்கிலாந்தின் மணிமுடிக்காக தனது தாயார் எப்போது வழிவிடுவார் என இவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுவதுண்டு.

இந்தியாவிற்கு வருகைதரும் இவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசவுள்ளாராம். அச்சந்திப்பில், பருவநிலை மாற்றம், நிலைத்த சந்தை மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களை விவாதிக்க உள்ளாராம்.

மேலும், நவம்பர் 14ம் தேதி சார்லசுக்கு 71வது பிறந்த நாளாம்! அந்த நாளில் இந்திய சுற்றுப் பயணத்தில் இருப்பதால், தனது பிறந்தநாளை இந்தியாவிலேயே கொண்டாடவுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. சார்லஸ் இந்தியாவிற்கு வருவது இது பத்தாவது முறை என்றும் கூறப்படுகிறது.