சென்னை:

ரசு இடத்தை ஆக்கிரமித்து அனுமதி இல்லால் வீடு கட்டியது தொடர்பாக , சென்னை மாநகர முன்னாள் திமுக மேயர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி  மீது நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

‘கடந்த  2006 முதல் 2011ம் ஆண்டு வரை  சென்னை மாநகர மேயராக இருந்தவர் திமுகவை சேர்ந்த மா.சுப்பிர மணியன். தற்போது சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருக்கிறார். இவர் ஈக்காடுதாங்கல் பகுதியில்  சிட்கோவுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து,  கட்டிட அனுமதி பெறாமல் 2 மாடிகள் கொண்ட் வீடு கட்டியுள்ளதாக புகார் கூறப்பட்டது.

குறிப்பிட்ட அந்த இடம்  எஸ். கே கண்ணன் என்ற நபருக்கு சிட்கோவால் ஒதுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. பின்னர், சுப்பிரமணியன்  மனைவியான காஞ்சனா என்பவர்,  கண்ணனின் மகள் என்று கூறப்பட்டது. ஆனால், கண்ணன் வேறு ஒருவர் என்ற நிலையில், கண்ணனின் மகள்தான் காஞ்சனா என்பதை நிரூபிக்க போலியான ஆவனங்களை தாக்கல் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக   ஜூன் 3 ம் தேதி கிண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தாலும், பின்னர் அது சிபி-சிஐடிக்கு விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், மா.சுப்பிரமணியன் தரப்பில் கடந்த ஜூன் மாதம், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெறப்பட்டது. தற்போது சிபிசிஐடி விசாரணை முடிவடைந்த நிலையில், மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா மீது,.மோசடி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை கடந்த சனிக்கிழமை சைதாபேட்டை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

மா.சுப்பிரமணியன்மீது புகார் கூறியவர்,  2016 சட்டமன்றத் தேர்தலில் சுப்பிரமணியனுக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிட்ட எஸ் பார்த்திபன் என்பது குறிப்பிடத்தக்கது.