சென்னை:
சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து சில அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான  கமலஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்வி நிறுனங்கள் திறக்க தாமதமாவதால், 9 முதல் 12 வகுப்புகளுக்கு 30%  பாடங்கள் குறைக்கப்படுவதாக மத்தியஅரசு அறிவித்தது.
11-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாட புத்தகத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம், மதசார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. மேலும் உள்ளாட்சி அரசு நிர்வாகம் ஏன் வேண்டும், இந்தியாவில் உள்ளாட்சி நிர்வாகத்தின் வளர்ச்சி ஆகிய அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன.
இதேபோல 12-ம் வகுப்பு பாட திட்டத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், வங்கதேசம், இலங்கை, நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுடன் இந்தியாவின் தொடர்பு, இந்திய பொருளாதார வளர்ச்சியின் மாறுதல் நிலை, இந்தியாவில் சமூக இயக்கங்கள், உயர் பணமதிப்பிழப்பு ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவே பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மத்தியஅரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. ஏற்கனவே காங்கிரஸ், திமுக, மதிமுக உள்பட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மக்கள் நிதி மய்யம் கட்சியும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமஹலசன் பதிவிட்டுள்ள டிவிட்டில்,
மதச்சார்பின்மை, குடியுரிமை, ஜனநாயக உரிமைகள் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவை மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்ட அத்தியாயங்கள்!
நீக்கப்பட்ட பாடங்களுக்கு பதிலாக அவர்கள் மாணவர்களின் மன அழுத்ததைப் போக்கும் பஸ்டர்களாக மெய் காம்ப், கு க்ளக்ஸ் கிளனின் வரலாறு மற்றும் மார்க்விஸ் டி சேடின் ஜஸ்டின் ஆகியோரை சேர்க்க வேண்டும்  என்று கிண்டலடித்துள்ளார்.