சென்னை: மத்தியஅரசு ஜனவரி 1ந்தேதி முதல் ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி, ஜனவரி ஆம்னி பேருந்து டிக்கெட், ஊபர், ஓலா முன்பதிவுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படுகிறது. காலணிகளுக்கும் (செருப்பு) ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த புதிய வரி விகிதம் புத்தாண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சில மாற்றங்களை மத்திய அரசு ஜனவரி 1-ந்தேதி முதல் கொண்டு வருகிறது. அதன்படி, ஆன்லைன் வழியாக முன் பதிவு செய்து பயணத்தை மேற்கொள்ளும் அனைத்து சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி. புதிதாக விதிக்கப்படுகிறது. வாடகை கார்களை புக் செய்யும்போது அதற்கு பயணிகள் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். ஆனால், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்கள் ஆஃப்லைன்/மேனுவல் முறையில் வழங்கப்படும் பயணிகள் போக்குவரத்து சேவைகளுக்கு தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும்
இதுவரையில் ஓலா, ஊபர், கார்களுக்கும் ஆட்டோக்களுக்கும் செல்லக்கூடிய இடத்திற்கு கிலோ மீட்டர் கணக்கிடப்பட்டு வாடகை கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டது. இனிமேல் அதற்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. கூடுதலாக வசூலிக்கப்படும். ஏற்கனவே ரெயில், ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள் பயணிகள் போக்குவரத்து அல்லது உணவக சேவைகள் மூலம் வழங்கப்படும் சேவைகளுக்கு வரி செலுத்த வேண்டிய பொறுப்பு ஏற்பட்டு உள்ளது. ஸ்விக்கி மற்றும் ஜொமாடோ போன்ற இ-காமர்ஸ் ஆபரேட்டர்கள், ஜனவரி 1 முதல் வழங்கப்படும் உணவகச் சேவைகளில் அரசாங்கத்திடம் ஜிஎஸ்டியை வசூலிக்கவும், டெபாசிட் செய்யவும் பொறுப்பேற்றுள்ளனர். அத்தகைய சேவைகள் தொடர்பான விலைப்பட்டியல்களையும் அவர்கள் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேலும், பாதணிகள் மற்றும் ஜவுளித் துறைகளில் தலைகீழ் வரி கட்டமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. விலையைப் பொருட்படுத்தாமல் அனைத்து காலணிகளுக்கும் ஜிஎஸ்டி 12 சதவீதம் போடப்பட்டு உள்ளது. பருத்தி துணி தவிர அனைத்து ஜவுளிப் பொருட்களும் ஆயத்த ஆடைகள் உட்பட 12 சதவீதமும் விதிக்கப்படும்.
புதிய ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் பிற ஏய்ப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளில், ஜிஎஸ்டி ரீபண்ட் பெறுவதற்கு ஆதார் கட்டாய அங்கீகாரம், வணிகம் வரி செலுத்தாத மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பியை உடனடியாக தாக்கல் செய்யாத சந்தர்ப்பங்களில் ஜிஎஸ்டிஆர்-1 தாக்கல் செய்யும் வசதியைத் தடுப்பது உள்பட பல அறிவிப்புகளை நிதிஅமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
அத்தியாவசிய பொருட்களான செருப்பு, துணிகள் மற்றும் ஊபர் ஓலா போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரி போடப்பட்டுள்ளது கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்று முடக்கத்தால், தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் இன்னும் முழுமையாக தங்களது வாழ்வதாரத்தை மீட்டெடுக்காத நிலையில், ஜிஎஸ்டி வரியை உயர்த்தி உள்ளது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.