சிம்பாலி: மகாராஷ்டிராவில் ஏடிஎம் இயந்திரம் வெடிவைத்து தகர்த்து, அதனுள் வைக்கப்பட்டிருந்த சுமார் 16 லட்சம் ரூபாய்  கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சிம்பாலி என்ற பகுதியில்  தனியார் வங்கி  ஏடிஎம் அமைந்துள்ளது.  அதிக அளவு ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதியை தொடர்ந்து நோட்டம் இட்டு வந்த கொள்ளையர்கள், நேற்று நள்ளிரவு ஏடிஎம் மையத்தை திறக்க முயற்சித்து உள்ளனர். அது முடியாததால்,  வெடி வைத்து உடைத்து, அதில் வைக்கப்பட்டிருந்த ரூ. 16 லட்சம் பணத்தை  கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து வந்த ஆய்வு செய்தனர். கொள்ளையர்களின் கைரேகை உள்பட உடைக்கப்பட்ட இயந்திரத்தின் பாகங்களை சேகரித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், ஏடிஎம் இயந்திர அறையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமிரா உள்பட அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை கொண்டு ஆய்வு நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட  விசாரணையின் முடிவில் மூன்று கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்துள்ளதாகவும்,  அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்து உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் மூன்று முறை இதேபோன்று ஏடிஎம் எந்திரத்தை வெடி வைத்து உடைத்து பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.