கடந்த காலங்களில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு, அவர் எதிர்பார்த்தோ அல்லது எதிர்பார்க்காமலோ ஒரு பெயர் சூட்டப்பட்டது. பாரதீய ஜனதாவின் ‘பி டீம்’ என்பதுதான் அந்தப் பெயர். அவரின் நடவடிக்கைகளும் அப்படித்தான் அமைந்தன.

ஜனாதிபதி வேட்பாளராக பாரதீய ஜனதா அறிவித்த ராம்நாத் கோவிந்திற்கு இவர் தனது ஆதரவை தெரிவித்தபோது, அந்த யூகங்கள் இன்னும் வலிமையாகின. ஆனால், மத்திய – மாநில நல்லுறவு என்று அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக அணிதிரட்டுவது போன்றோ அல்லது பாரதீய ஜனதாவுக்கு எதிராக அணிதிரள்வோரை (காங்கிரஸ் கட்சி பொறுப்பான முறையில் செயல்படவில்லை என்பது வேறு விஷயம்) மூன்றாவது அணி என்ற பெயரில் கலைப்பது போன்றோ அமைந்தன அவரின் சில செயல்பாடுகள். அதேசமயம், அவரின் முயற்சிகள் எந்தவொரு எதிர்பார்த்த தாக்கத்தையும் உண்டாக்கவில்லை என்றாலும், வெளிப்பார்வைக்கு அப்படித்தான் இருந்தன. ஆனால், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, அரசியல் மேகங்கள் வேறு திசையில் நகரத் தொடங்கிவிட்டன.

முந்தைய ஆண்டுகளில், சந்திரபாபு நாயுடு பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்தாலும், சந்திரசேகர ராவால், அரசியல் ரீதியாக காங்கிரசுடன் நெருங்க முடியாத நிலை. தெலுங்கானா விஷயத்தில் அவர் காங்கிரசுக்கு செய்த துரோகம் ஒருபுறம் இருந்தாலும், காங்கிரசுடன் நெருங்குவதென்பது தெலுங்கானாவில் அவரின் செல்வாக்கையே பலிகொடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும். எனவே, இவரின் அரசியல் நெருக்கம் என்பது அசாதுதீன் ஓவைஸி போன்றோரிடம் மட்டுமே சாத்தியமானது.

தெலுங்கு அரசியலிலேயே இவருக்கு சுத்தமாக ஆகாத நபராக மாறிப்போனவர் சந்திரபாபு நாயுடு. அவர் பாரதீய ஜனதா கூட்டணியிலிருந்து வெளியேறியதும், இவர் பாரதீய ஜனதாவோடு உறவில் இருக்கிறார் என்ற ஒரு தோற்றமும் கருத்தும் உருவானதென்பது ஒருவகை அரசியல் எதார்த்தமாகவே ஆகிவிட்டது.

ஆனால், 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும், தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ள வேண்டிய அரசியல் வியூகங்களே மாறிப்போனது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில் 5 இடங்களைப் பெற்ற பாரதீய ஜனதா, 2018 சட்டமன்ற தேர்தலில் 1 இடத்தை மட்டுமே பெறுகிறபோது, அக்கட்சி, சந்திரசேகர ராவுக்கு 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சவாலாக இருக்கும் என்று அவர் உட்பட யாரும் சாதாரணமாக எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்தான்.

தெலுங்கானாவில் தனித்துப் போட்டியிட்ட பாரதீய ஜனதா, 4 இடங்களில் பெற்ற வெற்றி என்பது சந்திரசேகர ராவுக்கு எதிர்பாராத அதிர்ச்சியாய் மாறிப்போகிறது. இவரின் செல்ல மகள் கவிதாவே, நிஜாமாபாத் தொகுதியில், பாரதீய ஜனதாவின் அர்விந்த் தர்மபுரியிடம் தோற்றதை, பாவம் சந்திரசேகர ராவால் எப்படி ஜீரணிக்க முடியும்? பெரியளவில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்ட அவரின் கட்சி பெறுவதோ ஒற்றை இலக்க இடங்கள்தான். 17 தொகுதிகளில் 9 இடங்களை மட்டுமே வெல்கிறார் கேசிஆர்.

பாரதீய ஜனதாவால் ஒரு மாநிலத்தில் சிறியளவு ஊடுருவ முடிந்தாலே, அவர்கள் அதைவைத்து பெரியளவில் திட்டம்போட்டு விடுவார்கள்! ஆனால், தற்போது தெலுங்கானாவில் சற்று பெரியளவிலேயே ஊடுருவியுள்ள நிலையில், அவர்கள் கட்டாயம் ‘வச்சி செய்துவிடுவார்கள்’ என்று அவருக்கு தெரியாமலா போகும்?

ஆனால், காங்கிரசுக்கு கடுக்காய் கொடுத்து, தெலுங்கானா ஆட்சியைப் பிடித்த பின்னர், வடகொரியாவின் கிம் ஜாங் குடும்ப பாணியிலான அரசியலை செய்துவந்தவர், பாரதீய ஜனதா அந்த மாநிலத்தில் படிப்படியாக வேர் விட்டதை இவ்வளவு தாமதமாகவா கண்டறிவார்..! என்ற ஆச்சர்யம்தான் பலருக்கும்.

இந்தத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், தெலுங்கானாவில் பாரதீய ஜனதா 2வது பெரிய கட்சி. சட்டமன்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அக்கட்சி 5வது இடத்தில் இருந்தது.
4 மக்களவை இடங்களை வென்ற பாரதீய ஜனதா, கொண்டாடிவிட்டு அமைதியாக இருந்துவிடுமா என்ன? செகுந்தரபாத் உறுப்பினர் கிஷான் ரெட்டிக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் என்ற முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பை கொடுத்து களமிறக்கிவிட்டுள்ளது. அவர்களின் குறி அடுத்த தெலுங்கானா சட்டமன்ற தேர்தல்.

அடுத்தடுத்த எதிர்பாராத இத்தகைய அதிர்ச்சிகளால், அரசியல்ரீதியாக தனது பேச்சு மற்றும் நடவடிக்கைகள் என அனைத்தையும் மாற்றியுள்ளார் சந்திரசேகர ராவ். நரேந்திர மோடியை முதன்முதலில் ‘சேடிஸ்ட்’ என்று அழைத்தவனே தான்தான் என்று நினைவுகூர்கிறார் (தெலுங்கானாவிலிருந்த சில மண்டல்களை ஆந்திராவிற்கு பிரித்துக் கொடுத்ததற்காக).

மோடியின் பதவியேற்பு விழா, நிதி ஆயோக் கூட்டம் ஆகியவற்றை புறக்கணித்த சந்திரசேகர ராவ், ‘ஒரு நாடு, ஒரு தேர்தல்’ குறித்த அனைத்துக் கட்சிகள் விவாதத்திற்கு, அந்த திட்டம் தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவுசெய்ய மகனும், கட்சியின் செயல் தலைவருமான ராமராவை மட்டுமே அனுப்பி வைக்கிறார்.

மத்திய அரசின் பங்களிப்பு எதுவுமில்லை என்பதால், காலீஷ்வரம் நீர்ப்பாசன திட்ட தொடக்க விழாவிற்கு பிரதமரை அழைக்க வேண்டிய தேவையில்லை என்கிறார். அடுத்துவரும் ஆண்டுகளில், பாரதீய ஜனதா அந்த மாநிலத்தில் மேலும் வளராமல் தடுத்து, தனது செல்வாக்கை காப்பாற்றிக் கொள்வதே இவருக்கான உடனடி இலக்காக இருக்கும். அதன்பொருட்டு, இவர் தீவிர மோடி எதிர்ப்பு அரசியலை கையில் எடுக்க வேண்டியிருக்கும். அதை இப்போதே தொடங்கிவிட்டார்.

தனது மோடி எதிர்ப்பு அரசியலுக்கு, நாயுடுவின் பிரதான மற்றும் தீவிர அரசியல் எதிரியான ஜெகன்மோகன் ரெட்டியையும் நெருங்கிய நட்பு வட்டத்தில் வைத்திருப்பதன் மூலம் துணைக்கு அழைத்துக் கொள்ளலாம். மோடி எதிர்ப்பு அரசியலுக்கு தேசியளவில் மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலின் போன்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால், மம்தா மற்றும் ஸ்டாலினுக்கு இல்லாத ஒரு பிரச்சினை இந்த இடத்தில் சந்திரசேகர ராவுக்கு உள்ளது. மேற்குவங்கத்தில் சோர்ந்துபோன கம்யூனிஸ்டுகள் மற்றும் ஒடுங்கிபோன காங்கிரஸ் ஆகியோரின் இடத்தைப் பிடித்துக்கொண்டு, மம்தா எதிர்ப்பு அரசியலை கையிலெடுத்தது பாரதீய ஜனதா. எனவே, முழுநேர மோடி எதிர்ப்பு அரசியல் செய்ய வேண்டிய தேவை மம்தாவுக்கு எழுந்தது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஆளுங்கட்சியான அதிமுகவை அடக்கியாண்டு, அதனுடன் கூட்டணி வைத்துக்கொண்ட பாரதீய ஜனதாவை, நாடாளுமன்ற தேர்தல் என்று வரும்போது கடுமையாக எதிர்க்க வேண்டிய தேவை ஸ்டாலினுக்கு இருந்தது. இதன்மூலம், அதிமுகவுக்கு செல்லக்கூடிய வாக்குகளையும் தன் பக்கம் இழுக்கும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு வாய்த்தது. மேலும், தமிழகத்தில் நிலவிய கடுமையான மோடி எதிர்ப்பும் அதற்கு துணைபுரிந்தது.

ஆனால், தெலுங்கானாவில் நிலவும் சூழல் அப்படியானதாக இல்லை. அங்கே பாரதீய ஜனதா இன்னும் பெரிதாக வளர்ந்துவிடவில்லை. வேறு எந்தப் பிரதான கட்சியும் பாரதீய ஜனதாவோடு கூட்டணியில் இல்லை. அவ்வாறான நிலையில், பிரதான மோடி எதிர்ப்பு அரசியல் என்பது தெலுங்கானாவில் பாரதீய ஜனதாவை வலிய சென்று வளர்த்துவிடுவதாகவே ஆகிவிடும். எனவே, இனிவரும் காலங்களில் பாரதீய ஜனதா எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்தே, தனது ஆட்டத்தை கவனமாக ஆட வேண்டிய நிலை சந்திரசேகர ராவுக்கு.

தெலுங்கானாவில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி சுணங்கிப்போய் கிடக்கிறது. அது இப்போதைக்கு விழிப்பதாக இல்லை. தெலுங்கானா தனி மாநிலத்தை எதிர்த்தவர்கள் என்பதால், சந்திரபாபு நாயுடு மற்றும் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கும் அங்கே பெரிதாக வளர்வதற்கான வாய்ப்பில்லை. எனவே, சுற்றிமுற்றி பார்த்தால், பாரதீய ஜனதாவுக்கான வாய்ப்புதான் அங்கே பிரகாசமாக தெரிகிறது.

எனவே, சந்திரசேகர ராவ் புத்திசாலித்தனமுள்ள விழிப்பு அரசியல் செய்து, பாரதீய ஜனதாவை வளரவிடாமல் தடுப்பாரா? அல்லது மம்தாவைப் போல் தடுமாறிப் போவரா? என்பது இனிமேல்தான் தெரியவரும்.

மோடி & அமித்ஷா என்ற அபாயமான இணை தலைமை தாங்குகின்ற பாரதீய ஜனதாவை வளரவிடுவதைவிட, கடந்த 5 ஆண்டுகளாகவே தெலுங்கானாவில் சோர்ந்துபோய் கிடக்கும் காங்கிரசிடம், கேசிஆர், சற்று நீக்குபோக்காக நடந்துகொள்வதே, பாரதீய ஜனதாவுக்கான வாய்ப்பை ஓரளவு மட்டுப்படுத்தும்.

அதை சந்திரசேகர ராவ் எந்தளவிற்கு மிக லாவகமாக செய்யப்போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

– மதுரை மாயாண்டி