சண்டிகர் மேயர் தேர்தல் இன்று நடைபெற்றது மொத்தமுள்ள 35 இடங்களில் பாஜக-வுக்கு 14 கவுன்சிலர்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 13 கவுன்சிலர்களும் காங்கிரஸ் கட்சிக்கு 7 மற்றும் சிரோமணி அகாலிதளம் கட்சிக்கு 1 கவுன்சிலரும் உள்ளனர்.

இதில் 8 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டது, தவிர செல்லாதவை என்று அறிவிக்கப்பட்ட வாக்குகளில் ஒன்று கூட பாஜக உறுப்பினர்களின் வாக்குகள் இல்லை.

ஏற்கனவே கடந்த 18ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தலைமை அதிகாரிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சட்டம்-ஒழுங்கு நிலை சரியில்லை என்று கூறி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற எதிர்க்கட்சிகள் மேயர் தேர்தலை விரைந்து நடத்த வலியுறுத்தின எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இன்று தேர்தல் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து 700 துணை ராணுவப்படை உதவியுடன் நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 16 வாக்குகள் பெற்று பா.ஜ.க வேட்பாளர் மனோஜ் சோங்கர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆம் ஆத்மி சந்தேகமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் வாக்குச்சீட்டுகளை தேர்தல் அலுவலர் தனது பேனாவால் திருத்துவது வீடியோவில் பதிவாகியிருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இதை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆம் ஆத்மி மேயர் தேர்தலுக்கே பாஜக தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டிருப்பது வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் எந்தமாதிரியான முறைகேடுகளில் ஈடுபடும் என்ற அச்சத்தை எதிர்கட்சிகளிடம் ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.