சனாதன தர்மத்துக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியதன் காரணமாகவே மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என்றும் 1934 முதல் காந்தியைக் கொல்ல 5 முறை முயற்சி நடைபெற்றதாகவும் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தியின் 77வது மறைந்த தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. மதவெறிக்கு பலியான மகாத்மா காந்தியின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாட்டில் இன்று மத நல்லிணக்க நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.

1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி மதவெறியன் நாதுராம் கோட்ஸே-வின் துப்பாக்கி குண்டுகளுக்கு மகாத்மா காந்தி இரையாவதற்கு முன் 5 முறை அவர் மீது கொலை முயற்சி நடைபெற்றது.

காந்தியை கொன்ற பின் தப்பியோட முயன்ற கோட்ஸே-வை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்ததாலேயே மகாத்மா காந்தியை கொன்றதாக கோட்ஸே-வை தூண்டிவிட்ட அவரது குரு சாவர்க்கர் கூறிய பொய்யை கோட்ஸே-வும் நீதிமன்றத்தில் கூறினார்.

ஆனால், இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் 1944ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் பஞ்சாக்னி எனும் இடத்தில் கையில் கத்தியுடன் காந்தியைக் கொலை செய்ய முயன்ற நாதுராம் கோட்ஸே மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

கிரிமினல் குற்றச்சாட்டுகளை முன்வைக்க மறுக்கும் தனது அஹிம்சா கொள்கை காரணமாக நாதுராம் கோட்ஸே மீது மகாத்மா காந்தி எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் வேண்டாம் என்று அப்போது மன்னித்து விட்டுவிட்டார்.

சனாதன தர்மத்துக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மகாத்மா காந்தி போராடியதன் காரணமாகவே மதவெறியர்கள் அவரை கொலை செய்தனர் என்று துஷார் காந்தி பதிவிட்டுள்ளார்.