சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் ஒருசில நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதுபோல, தமிழ்நாடு வெதர்மேனும், இது அரிதான நிகழ்வு என்று சில இடங்களில் மழை கொட்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். இது அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை (28ந்தேதி) மற்றும் நாளை மறுநாள் (29ந்தேதி) தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜனவரி 30ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இன்றும் , நாளையும் பூமத்திய ரேகையை ஓட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை மறுநாள் மற்றும் 30ஆம் தேதி இலங்கையை ஓட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள பதிவில், , MJO என்று அழைக்கப்படும் madden julian oscillation அலைவு காரணமாக இந்த அரிதான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக போவதாக தெரிவித்துள்ளார். மேலும், இது ரொம்ப அரிதான நிகழ்வு’ என தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனவரி 29, 30 தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்யும். அதேபோல் பிப்ரவரி 5/6 தேதிகளில் தமிழ்நாட்டில் மழை பெய்யும். தென் தமிழ்நாட்டிலும் நல்ல மழை பெய்யும். இலங்கையில் மிக கனமழை பெய்ய போகிறது.
சென்னையில் 29 மற்றும் 31 தேதிகளில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.