சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மேற்கு பருவக் காற்றின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மத்திய வங்கக் கடல் மற்றும் வட தமிழகம், ஆந்திரா, ஒடிசா ஒட்டிய கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காரைக்காலில் 3 சென்டி மீட்டர், நாகையில் 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.