மெரினா பீச்சில் ஊரடங்கு விதியை கண்டுக் கொள்ளாமல் சுற்றும்  சென்னை மக்கள்

Must read

சென்னை

சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் கூட்டமாய் சுற்றி வருகின்றனர்.

இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் சென்னை நகரில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.  இதற்கு முக்கிய காரணம் ஊரடங்கு விதிகளை மீறுவது, முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியைப் பின்பற்றாதது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.  உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான பகுதிகளில்  உட்புற சாலைகளில் தடுப்புக்கள் இடப்பட்டு மக்கள் தடுக்கப்பட்டனர்.  மக்கள் இங்கு கூடுதல் கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் தற்போதைய ஊரடங்கில் மத்திய அரசின் ஆலோசனைப்படி பல விதிகள் தளர்வைத் தமிழகம் அறிவித்துள்ளது.  அதில் மெரினா கடற்கரையில் மக்களை அனுமதிக்க உள்ளதாக எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.  ஆயினும் பொதுமக்கள் விதிகளை மீறி கடற்கரையில் காலை மாலை இரு வேளைகளிலும் கூட்டம் கூட்டமாக நடைப்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி செய்து வருகின்றனர்.

பெரும்பாலானோர் முக கவசம் கையுறை அணிவதில்லை, அத்துடன் சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் இல்லை.  அது மட்டுமின்றி பலர் கடற்கரை உட்புற மற்றும் வெளிப்புற சாலைகளில் கூடி அமர்ந்து அரட்டை அடித்து வருகின்றனர்.  பெரும்பாலான மக்கள் காலை 5 மணிக்கு நடைப் பயிற்சிக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.   இவர்களை திருப்பி அனுப்புவது காவல்துறையினருக்கு மிகவும் கடினமாக உளது.

காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் நடைப்பயிற்சிக்கு வருவோருக்கு எச்சரிக்கை அளிக்கின்றனர்   ஆனால் அதைச் சட்டை செய்யாமல் மக்கள் நடைப்பயிற்சி செய்து வருகின்றனர்.  அரசு அளிக்கும் அறிவுரை மற்றும் தடையை மீறி இவ்வாறு செல்வதால் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்களும் எச்சரித்துள்ளனர்.  ஆயினும் மக்கள் அதைக் கண்டு கொள்வதே இல்லை எனக் கூறப்படுகிறது.

More articles

Latest article