சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 28ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக  13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,  அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் விலகுவதைத் தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு, காற்றின் திசை மாறுபாடு மற்றும் வளிமண்டல சுழற்சி உள்ளிட்ட காரணிகளால் வரும் 26-ம் தேதி முதல் 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அந்த வகையில் குமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழையும் பெய்யக்கூடும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருத்தணி, நாற்றாம்பள்ளியில் தலா 5 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், பெனுகொண்டாபுரத்தில் 4 செ.மீ., மழை பதிவானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.