சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில்,  சக்கரப்பள்ளி,  அய்யம்பேட்டை,  தஞ்சாவூர் மாவட்டம்.

சக்கரவாஹப் பறவை வழிபட்ட தலம் என்றும் கூறுவர். “வண்சக்கிரம் மால் உறைப்பால் அடிபோற்றுக் கொடுத்தபள்ளி” என்பது இத் தலபுராண வரலாற்றை உறுதிப்படுத்தும்.

இந்திரன் குமாரனான ஜயந்தனும் தேவர்களும் பூசித்த தலம். திருமால் இத்தல இறைவனை வழிபட்டு சக்கராயுதம் பெற்றதனால் இத்தல இறைவனுக்கு “சக்கரவாகேஸ்வரர்” என்றும், ஊர் “சக்கரப்பள்ளி” என்றும் பெயர். 

சப்த தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். பிராமி, மகேசுவவரி, கௌமாரி, வைணவி, வராகி, மாகேந்திரி, சாமுண்டி முதலிய சப்தமாதர்கள் வழிபட்ட தலம். மக்கள் வழக்கில் இவ்வூர் “ஐயம்பேட்டை” என்று வழங்குகிறது. இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர் ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர். 

கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கொடிமரமில்லை. உள்ளே நுழைந்ததும் முதலில் வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது. தெற்கு நோக்கியது. நின்றநிலை. கருவறை கீழ்புறம் கருங்கல்லாலும் மேற்புரம், விமானம் சுதையாலும் ஆக்கப்பட்டவை.

விமானத்தில் அதிக சிற்பங்களில்லை. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தெட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை அகியோர் உள்ளனர். பிரகார வலம் வரும்போது விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. மகாமண்டபத்தில் சூரியன், சந்திரன், அழகான பைரவர், நால்வர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கல்வெட்டுக்களில், இவ்வூர்,”குலோத்துங்க சோழவள நாட்டு, விளநாட்டு, இராசேந்திர சோழ சதுர்வேதிமங்கலம்” என்று குறிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாம் குலோத்துங்க சோழனின் 12 ஆவது ஆண்டுக் கல்வெட்டு, இவ்வூர்ச்சபைக்குரிய சில விதிகளைக் கூறுகின்றன. நாற்பது வயதுக்கு மேற்பட்டவரே ஊர்ச்சபை உறுப்பினராகலாம் என்றும், அவர்களும் பத்து ஆண்டுகளுக்குள் உறுப்பினர்க்கு நிற்காதவராக இருக்க வேண்டுமென்றும் ஊர்ச்சபை விதிகள் கூறப்பட்டுள்ளன. இங்கு மூலர் சுயம்புலிங்கமாக உயர்ந்த தோற்றத் துடன் அருள்பாலிக்கிறர். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம்.

திருவிழா:

பங்குனி உத்திரம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை.

பிரார்த்தனை:

திருமணத்தடை நீங்கவும், செல்வ வளம் செழிக்கவும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்