டெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி வருகிறார். இந்த கலந்துரையாடலில் பங்கேற்ற டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஆக்ஸிஜன் ஆலைகள் அனைத்தையும் மத்தியஅரசு கையகப்படுத்தி, ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் என யோசனை தெரிவித்தார்.
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 730 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேரத்தில் 2 ஆயிரத்து 263 பேர் உயிரந்துள்ளனர். தற்போதைய நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் 24 லட்சத்து 28 ஆயிரத்து 616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 82 சதவிகித தொற்று பாதிப்பு டெல்லி, தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் மட்டுமே காணப்படுகிறது.
தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக, நோயாளிகளுக்கு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல மாநிலங்களில், ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும், நீதிமன்றங்களும் மத்தியஅரசை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி, 10 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசு சார்பில், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பங்கேற்றார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் குறைவாக உள்ளதாகவும், ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க நாட்டில் உள்ள அனைத்து ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளையும் மத்தியஅரசு கையகப்படுத்தி ராணுவத்திடம் ஓப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லிக்கு வரும் ஆக்ஸிஜன் வாகனங்களை பல மாநிலங்களில் தடுத்து நிறுத்தியதால், டெல்லிக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாக கூறியவர், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.