சென்னை: தீவிர கொரோனா அறிகுறிகள் இருப்பவர்களுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவார்கள்,  தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாத பட்சத்திலோ அல்லது லேசான அறிகுறிகள் இருக்கும் பட்ச்சத்திலோ  மருத்துவமனையை நேரடியாக நாடுவதை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்,  வீட்டிலேயே தனிமையில் இருங்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னை ஈக்காட்டுத்தாங்கலில்  செய்தியாளர்களை சந்தித்த ஆணையாளர் பிரகாஷ்,  கொரோனா தொற்று பாதிப்பு மே மாதம் மத்தியில்  உச்சத்தில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

சென்னையில் தினசரி வரும் 3700 தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1200 பேருக்கு மட்டுமே தீவிர அறிகுறிகள் ஏற்படுகிறது. அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது.. இதனை பொதுமக்கள் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் பெரும்பாலான இறப்புகளை தவிர்க்க முடியும்.  அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் மட்டுமே ஒருவர் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவர்.

தொற்று உறுதி செய்யப்பட்டு அறிகுறிகள் இல்லாத அல்லது லேசான அறிகுறிகள் உள்ள நோயாளிகள் சென்னை முழுவதிலுமுள்ள 12 கொரோனா கண்காணிப்பு மையங்களை தொடர்பு கொள்ளவேண்டும். பின் அங்குள்ள மருத்துவர்களின் ஆலோசனைக்கு இணங்க வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் குறைந்தது 50 சதவிகித படுக்கை வசதிகள் இருக்க வேண்டும் என்றும் தீவிர அறிகுறிகள் கொண்ட நோயாளிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற தலைமை செயலாளரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள் இல்லாத நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது மருத்துவர்களுக்கு வேலைப்பளு ஏற்படுவதனால் தீவிர அறிகுறிகள் கொண்ட நோயாளிகளை கவனிப்பதில் சிக்கல் ஏற்படுவதுடன், நோயாளிகளின் இறப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சிகிச்சை பெறுபவர்களுக்கு  பாதிப்பை பொறுத்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் நாட்கள் மாற்றமடையும். ஒரு சிலர் 4 நாட்களில் டிஸ்சாரஜ் செய்யப்படலாம். சிலர் 10 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம்.

தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் பொதுமக்கள் மாநகராட்சி வாகனங்களை நாட வேண்டும் என்ற அவசியமில்லை தங்களது சொந்த வாகனங்களிலேயே பாதுகாப்புடன் கண்காணிப்பு மையத்துக்கு வரலாம்.

சென்னையில் தற்போது நாளொன்றுக்கு 20,000 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது இதனை 25,000 வரை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காதாரத்துறை மூலம் “செயலி” ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது இதன் மூலம் எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு படுக்கை வசதிகள் உள்ளது என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.

தொற்று தாக்கத்தில் இருந்து, தப்பித்துக் காள்ள பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை முறையாக கடைபிடிக்க வேண்டும் அவ்வாறு கடைப்பிடித்தால் 4 நாட்களுக்குள் தொற்றின் விகிதாச்சாரத்தை பாதி அளவிற்கு குறைக்க மூடியும். முடிந்த அளவிற்கு திருமணம், பண்டிகைகள் போன்ற நல்ல காரியங்களைத் தள்ளிப் போடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.