திருவனந்தபுரம்: நாடு முழுவதும் ஒரே வகையான பொது திருமண சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத்தியஅரசு தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பல்வேறு மதம் தொடர்பான திருமண சட்டங்களால் குடும்ப நீதிமன்றங்கள் மற்றொரு போர்க்களமாக மாறியுள்ளன என்றும் கருத்து தெரிவித்து உள்ளது.
மத்தியஅரசு தற்போது நாடு முழுவதும் ஒரே வகையான சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், பொதுசிவில் சட்ட வரைவு மசோதாவை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி களின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்கான பொது திருமண சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத்தியஅரசு தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது ஆணும், 28 வயது பெண்ணும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்த இருவருக்கும் இடையே திருமணமான சில மாதங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை அடுத்து, கணவன் – மனைவி இருவரும் விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்து கடந்த மே மாதம் கேரளாவில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் ஒன்றாக விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.
இருவரும் மனம் உகந்து விவாகரத்திற்கு விண்ணப்பித்த நிலையில் கிறிஸ்தவ மதத்தினருக்கான விவாகரத்து சட்டப்பிரிவு 10ஏ-ன்படி, திருமணமாகி ஓராண்டுக்கு பின் தான் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க முடியும். அப்போது தான் விவாகரத்து விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறி அந்த மனுவை குடும்ப நல நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ. முகமது முஸ்டாக் மற்றும் ஷோபா அன்னம்மா ஈப்பன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இருவரின் சம்மதம் இருந்த போதும் விவாகரத்து பெற ஓராண்டு நிறைவாகி இருக்க வேண்டும் என்ற கிறிஸ்தவ மதத்தினருக்கான விவாகரத்து சட்டப்பிரிவு 10 சட்டத்தை ரத்து செய்தது.
மேலும், இதுபோன்ற பல்வேறு மதம் தொடர்பான திருமண சட்டங்களால் குடும்ப நீதிமன்றங்கள் மற்றொரு போர்க்களமாக மாறியுள்ளன என்று கருத்து தெரிவித்ததுடன், திருமண பிரச்னையில் தம்பதியின் நலனை மேம்படுத்த இந்தியாவில் பொதுவான திருமண சட்டத்தை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மனுதாரர்கள் குடும்ப நல நீதிமன்றத்தை அனுகி விவாகரத்து வழக்கை நடத்தலாம் என்றும் அனுமதி அளித்தது.