சென்னை:

க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசின் பணிகளில் தலையிட புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு மதுரை உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ள நிலையில், உச்சநீதி மன்றமும் தடையை விலக்க மறுத்து விட்ட காரணத்தால் மீண்டும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு  மாநில ஆளுநராக உள்ள பாஜக ஆதரவாளர் கிரண்பேடி, மாநில அரசின் திட்டங்களுக்கு அனுமதி வழங்க மறுத்து மாநில அரசுக்கு அவப் பெயர் ஏற்படுத்தி வருகிறார். இதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் கிரண்பேடிக்கு சிறப்பு அதிகாரம் வழங்குவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இதை ரத்து செய்யக் கோரி புதுச்சேரி  ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டை முறியடிக்கும் வகையில் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியான துணைநிலை ஆளுநர் செயல்பட முடியாது எனக் கூறி, யூனியன் பிரதேச அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மதுரை உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கடந்த  மே 8ந்தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த  உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன் வழக்கை சென்னை உயர்நீதி மன்றதிலேயே விசாரித்துக் கொள்ள அறிவுறுத்தியது.

இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மத்திய உள்துறை அமைச்சகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து யூனியன் பிரதேச அரசு வழக்கு தொடராத நிலையில், தனிநபரான எம்எல்ஏ லட்சுமி நாராயணன் வழக்கு தொடர உரிமையில்லை. மாநில அரசுக்கும், யூனியன் பிரதேச அரசுக்கும் இடையில் தெளிவான வித்தியாசத்தை அரசியல் சாசனம் தெரிவித்துள்ள நிலையில், தனி நீதிபதி தவறான முறையில் தீர்ப்பளித்துள்ளார் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.