டில்லி
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள யாரையும் வற்புறுத்த முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடெங்கும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தொடங்கியதில் இருந்து மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை தீவிரமாக்கி உள்ளது. நாடெங்கும் ரயில்வே பயணம் உள்ளிட்ட்வைகளுக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இதில் மாற்று திறனாளிகளுக்கு விதி விலக்கு அளிக்கக் கோரி எவாரா அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் மத்திய அரசு, “மத்திய அரசு மாற்றுத் திறனாளிகளுக்குத் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும் என எங்கும் உத்தரவு இடவில்லை.
மேலும் இந்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வழி காட்டுதல்களின்படி எந்த ஒரு நபரின் அனுமதியைப் பெறாமல் வலுக்கட்டாயமாகத் தடுப்பூசி போட வேண்டும் எனக் கருத்து தெரிவிக்கவில்லை. தற்போது தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் கொரோனா தடுப்பூசி பொது நலன் கருதி அனைவருக்கும் போடப்படுகிறது.
விதிமுறைகளின் படி கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என வற்புறுத்த முடியாது. ஆயினும் மத்திய அரசு அனைத்து குடிமக்களையும் அவர்களாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அனைத்து ஊடகங்கள் மூலமும், தெரியப்படுத்தி வருகிறது.” என தெரிவித்துள்ளது.