டில்லி:
நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நாளை மத்திய அரசு கையெழுத்திட உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தின். நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை உள்ளிட்ட பல பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் லாபரெட்டரீஸ் என்ற நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிறுவனம், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. சித்தேஸ்வராவின் குடும்பத்துக்கு சொந்தமானது.
இந்தத் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை ஆகிய ஊர்களில் பொது மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து, “மக்கள் விரும்பாத வரையில் இத் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம்” என்று உறுதிமொழி அளித்ததார்.
இதையடுத்து நெடுவாசல் போராட்த்தை தற்காலிமாக ஒத்திவைத்தனர் மக்கள்.
இந்த நிலையில்,நெடுவாசல் உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார் நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாளை கையெழுத்திடுவார் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
போராட்டக்குழுவினர், “மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பொய்யான வாக்குறுதிகள் தந்து போராட்டங்களை கைவிட செய்துவிட்டார். மத்திய அரசின் செயல் நம்பிக்கைத்துரோகம் செய்வதாக உள்ளது.
மீண்டும் போராட்டத்தைத் துவங்குவோம்” என்று அறிவித்துள்ளனர்.
இதனால் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார்கொல்லை ஆகிய இடங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது.