2012 ல் இயற்றப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்ட (COTPA) விதியின்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் புகையிலைப் பயன்படுத்தும் காட்சிகள் வரும் போது புகையிலைக்கு எதிரான சுகாதார புள்ளிவிவரங்கள், ஆடியோ-காட்சி பொறுப்புத் துறப்பு, நிலையான சுகாதார எச்சரிக்கை செய்திகள் காட்டப்பட வேண்டும்.
மத்திய சுகாதாரத் துறை சமீபத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஆய்வு செய்ததில், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மேற்கண்ட விதிகள் பின்பற்றப்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் சட்டத்தின் (COTPA) விதிகளைப் பின்பற்றாத தொலைக்காட்சி ஒளிபரப்புகளைக் கண்காணிக்க மத்திய சுகாதாரம் மற்றும் தகவல் துறை அமைச்சகத்துடன் இணைந்து குடும்ப நலம் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் ஒரு செயல்முறையை நிர்ணயிக்க உள்ளது.

திரைப்பட தணிக்கை குழுவான மத்திய திரைப்பட சான்றிதழ் சபையிடம் (CBFC) திரைப் பட விதிகள் மற்றும் தெளிவான வழிகாட்டி நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு மத்திய சுகாதார அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் செயலாளர் சிகே மிஸ்ரா கூறுகையில், “ பிரச்சினையைச் சமாளிக்க தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுகின்றோம். நாங்கள் அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி சட்டங்கள் அமலாக்கம் செய்ய ஒன்றாக வேலை செய்து கொண்டிருக்கின்றோம்,” என்றார்.
” திரைப்படங்களுக்கும் விளம்பரங்களுக்கும் சான்றளிக்கும் போது புகையிலை பயன்பாட்டை ஊக்குவிக்கும் காட்சிகளை அடையாளம் கண்டு நீக்கவேண்டுமெனச் சென்சார் குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளோம்” என்றார் மிஸ்ரா.

COTPA விதிகள் இயற்றி ஐந்து ஆண்டுகள் ஆகியபின்னரும் இந்தியாவில் புகையிலை காட்சி விதிகள் சரியாகச் செயல்படுத்தப் படவில்லை என்பதை உணர்ந்தபின்னர் சுகாதார அமைச்சகத்தால் ஆய்வு செய்ய முடிவுசெய்யப்பட்டது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்கொள்ளப் பட்ட ஆய்வுமுடிவின்படி திரைப் படங்களில் COTPA விதிகள் 27 சதவீதம் மட்டும் பின்பற்றப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.

ஆய்வின் போது, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் 22 சதவீதம் புகையிலை பயன்பாடு சித்தரிக்கப் பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தில் 71 சதவீதம் இத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவது கவலையளிக்கக்கூடிய விசயமாகும். சில நிகழ்ச்சிகளில் “குடி குடியைக் கெடுக்கும்” போன்ற நிலைத் தகவல்கள் காட்டப்பட்டாலும், விதிகள் முறையாக அமல்படுத்தப்படவில்லை.
வைடல் ஸ்ட்ராடஜிஸ் இயக்குநர் நந்திதா முருகுட்லா இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம், “புகையிலை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விதமான விளம்பரங்களுக்குப் பல கோடி முதலீடு செய்கின்றனர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிகரெட், புகையிலை பயன்படுத்துவதை காண்பிப்பது மூலம், பொதுமக்களைப் புகையிலை பயன்படுத்த ஊக்குவிக்க முடியும்.
ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் புகையிலையால் இறக்கின்றனர். இதனால் வருடத்திற்கு 1.5 லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தை இந்தியப் பொருளாதாரம் சந்திக்கின்றது. எனவே தொலைக்காட்சி மற்றும் சினிமாத் துறையினர் “புகையிலை இல்லா கலாச்சாரம் உருவாக்கத் தமது கடமையுணர்ந்து பணியாற்ற வேண்டுகின்றேன்” என்றார்.