புதுடில்லி:
7வது சம்பள கமிஷன் பரிந்துரையை அமல்படுத்த மத்திய அரசு முடிவெடுத்து உள்ளது. இதுகுறித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ம்பளத்தை உயர்த்தி அளிக்கும், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் மத்திய அரசால் கடந்த மாதம் ஏற்றுகொள்ளப்பட்டது. அதையடுத்து இந்த சம்பள உயர்வை அமல்படுத்தும் வகையிலான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் வேலைத் திறனை அதிகரிக்கவும், சரியாக வேலை செய்யாதவர்களுக்கு, பதவி உயர்வு, சம்பள உயர்வை ரத்து செய்வது குறித்தும், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள, எம்.ஏ.சி.பி., எனப்படும், ‘மாற்றியமைக்கப்பட்ட உறுதியான பணி முன்னேற்றம்’ திட்டத்தின்படி, 10, 20, 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர்களின் சம்பளம், அடுத்த நிலைக்கு தானாகவே உயர்த்தப்படும்;
இதைத் தொடருவதற்கு கமிஷன் அளித்த பரிந்துரையை அரசு ஏற்றுள்ளது. அதே நேரத்தில் இதில் சில மாற்றங்கள் செய்து, கமிஷன் அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது:
சிறப்பாக வேலை செய்யாவிட்டாலும், சம்பளம் உயரும் என்ற மனநிலையில், மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர்.
சிறந்த முறையில் பணியாற்றுபவர்களுக்கே சம்பள உயர்வு, பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும்.
அதேநேரத்தில், 20 ஆண்டுகளில், சிறப்பாக பணிபுரியாத ஊழியர்களுக்கான, சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.
மேலும், வழக்கமான பதவிஉயர்வுக்கான அடிப்படை தகுதியையும் உயர்த்த வேண்டும்.
இந்தப் பரிந்துரையை, மத்திய அரசு அப்படியே ஏற்று, அரசாணையிலும் வெளியிட்டுள்ளது.
அரசாணையின்படி, ‘சிறப்பாக பணியாற்றாத, அரசு ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காது’ என தெரிகிறது.
அதேபோல் ஒருவர் பணியில் சேரும்போது அல்லது பணியில் இருக்கும்போது, தன் மீது உள்ள வழக்குகள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை மறைக்கக் கூடாது. இவ்வாறு மறைத்து பெறும் பணி உத்தரவு செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் உள்ளது.
அரசாணை விவரம்: வரும் ஆகஸ்ட் மாதம் முதல், உயர்த்தப்பட்ட சம்பளம் கிடைக்கும்* இதன் மூலம், 53 லட்சம் ஓய்வூதியதாரர்கள், 47 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர். ‘இந்த ஊதிய உயர்வால், மத்திய அரசுக்கு, 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்’ என, அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசாணையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச சம்பளம், 7,000 ரூபாயில் இருந்து, 18 ஆயிரம் ரூபாயாக உயர்கிறது.
அதிகபட்ச சம்பளம், 90 ஆயிரம் ரூபாயில் இருந்து, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது*l பணியில் சேர்ந்த மாதத்தின் அடிப்படையில், ஆண்டு ஊதிய உயர்வு, ஜனவரி, 1 அல்லது ஜூலை, 1ம் தேதிகளில் உயர்த்தப்படும். ஆண்டு ஊதிய உயர்வு, 3 சதவீதமாக இருக்கும்.
ஊழியர்களின் சம்பள உயர்வு சராசரியாக, 2.57 மடங்காக இருக்கும்.