டில்லி

மத்திய அரசு அளித்து வரும் இலவச உணவு தானிய திட்ட நீட்டிப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவின் பிரதமர் ஏழைகள் உணவுத் திட்டம் உலகின் மிகப்பெரிய சமூக நலத் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இந்த திட்டம் மூலம் 81.35 கோடி நபர்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்த திட்டம் நடப்பு ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி உடன் முடிவடைகிறது.

இந்நிலையில் இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. எனவே ரூ.11.80 லட்சம் கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இனி இந்தியாவில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் பயனாளிகள் நாட்டில் உள்ள 5 லட்சத்துக்கும் அதிகமான நியாயவிலைக் கடைகளின் மூலம் அரிசி, கோதுமை, சிறுதானியங்கள் ஆகிய இலவச உணவு தானியங்களை தொடா்ந்து வாங்கலாம்.

பிரதமர் மோடி இதனால் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு, ஏழைகள் மற்றும் பாதிக்கப்படும் பிரிவினரின் நிதி நெருக்கடியையும் குறையும் என்று கூறியுள்ளார்.