நாக்பூர்

ஆர் எஸ் எஸ் அமைப்பின் விஜயதசமி விழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

நாடெங்கும் இன்று நவராத்திரி திருநாளின் இறுதி தினமான விஜயதசமி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.    துர்கா தேவி மகிஷாசுரனுடன் ஒன்பது தினங்கள்  போரிட்டு அவனை இன்று வதம் செய்ததாகத் தமிழ்நாட்டில் ஒரு ஐதிகம் உள்ளது.  வட இந்தியாவில் இன்று ராவணன் எரிப்பு விழா நடைபெறுகிறது.   பல பள்ளிகளில் இன்று மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது.

ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைமையகம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ளது.   இங்கு விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிகழ்ச்சி ஒன்றை இன்று நடத்தியது.   மிகவும் கோலாலகல்மாக நடந்த இந்த நிகழ்வில் பல ஆர் எஸ் எஸ் தலைவர்களும் பாஜகவினரும் பங்கு கொண்டனர்.

இந்த விஜயதசமி நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிர முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரிகளான நிதின் கட்காரி மற்றும் வி.கே. சிங் (ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எச்.சி.எல். நிறுவனர் ஷிவ் நாடார் கலந்து கொண்டார்.  இந்நிகழ்வில் தலைவர்களுடன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை சேர்ந்த தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் அனைவரும் தலைவர்கள் முன்னிலையில் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.