டில்லி

மீண்டும் வேளாண் சட்டங்களை எந்த வடிவிலும் கொண்டு வரும் திட்டம் இல்லை என மத்திய வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.   டில்லியில் சுமார் 1 வருடம் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.   சுமார் ஒரு வருட் போராட்டத்துக்குப் பிறகு மத்திய அரசு இந்த சட்டங்களைத் திரும்பப் பெற்றது.

ஆனால் இந்த வேளாண் சட்டங்கள் திரும்ப வேறு வடிவில் வரலாம் என அச்சம் எழுந்துள்ளது.  இது குறித்து மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர, “பிரதம மோடி நாட்டின் விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டு வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முடிவு எடுத்துள்ளார்.

வேளாண் சட்டங்களைத் திரும்பக் கொண்டு வர மத்திய அரசுக்குத் திட்டம் ஏதும் இல்லை.  ஆனால்  எதிர்க் கட்சிகள் தங்களது தோல்விகளை மறைக்க எதிர்மறையான பிரச்சாரம் செய்து, விவசாயிகளைக் குழப்புகிறது.  எதிர்க்கட்சிகள் கிளப்பும் இந்த குழப்பத்தில் விவசாயிகள் சிக்க வேண்டாம்  விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”என அறிக்கை வெளியிட்டுள்ளார்.