டில்லி
டில்லி நகரம் மனிதர்கள் வாழ தகுதி அற்ற நகரம் என மத்திய இணையமைச்சர் ஹர்தீப் சிங் புரி குற்றம் சாட்டி உள்ளார்.
நேற்று டில்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கலந்துக் கொண்டார். இவர் மத்திய அரசில் நகர்ப்புற விவகாரம், வீட்டுவசதித் துறை ஆகியவற்றை கவனித்துக் கொண்டு வருகிறார். இவர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டு டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசை மறைமுகமாக பெரிதும் தாக்கி உள்ளார்.
அவர் தனது உரையில், “தலைநகர் டில்லியில் மட்டும் 7000 அரசு பேருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. அரசின் இந்த அலட்சியப் போக்கால் பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி டில்லியில் வசிக்கும் மக்கள் அதிகம் கார்களை வாங்குகின்றனர். இவ்வாறு பொதுப் போக்குவரத்து சரி இல்லாததால் வாகனங்கள் வாங்கி வாகன நெரிசல் ஏற்படுவதற்கு தில்லி மக்களை குற்றம் சொல்ல முடியாது. மொத்தத்தில் டில்லி நகரம் மனிதர்கள் வாழத் தகுதியற்ற நகரமாக முற்றிலும் மாறி விட்டது.
தில்லியில் பல முன்னேற்ற திட்டங்கள் நிலுவையில் உள்ளது. மெட்ரோ ரெயில் விரிவாக்கம், தில்லி சீலிங் பிரச்னை, அந்த பிரச்னைக்கான தீர்வுக்கு மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு ஆகியவைகளே இந்த முன்னேற்ற திட்டங்களின் தடங்கலுக்கு காரணம் ஆகும்.” என அமைச்சர் கூறி உள்ளார்.