டில்லி

ன்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதார அமைச்சர்களுடன் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார்.

நாடெங்கும் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.    நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 27,553 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  மேலும் உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பரவலும் அதிகரித்து வருகிறது.   நாட்டில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

இது குறித்து இன்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில சுகாதார அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி உள்ளார்.   இந்த கூட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தல்,  மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பரிசோதனைகளை அதிகரித்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா,

“இதற்கு முன் நாம் கொரோனாவுக்கு எதிராகக் கடுமையாகப் போர் புரிந்துள்ளோம்.  அவ்வாறு கடந்த காலங்களில் கற்ற பாடங்களைப் பயன்படுத்தி ஒமைக்ரானுக்கு எதிராக போராட வேண்டி உள்ளது.  எனவே அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனைக் கையாளும் விதத்தில் சுகாதார கட்டமைப்பைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

தவிர மாநிலங்கள் கொரோனா கால நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.மாநிலங்கள் தங்களுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை தெரியப்படுத்திப் பெற்றுக்கொள்ள வேண்டும்.   கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்”

எனத் தெரிவித்துள்ளார்.