டில்லி

த்திய அரசு மேலும் 36 ரஃபேல் போர் விமான ஒப்பந்தங்களை வாங்க ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கடந்த பாஜக ஆட்சியில் பிரான்ஸில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்தது. எதிர்க்கட்சிகள் இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாக மக்களவைத் தேர்தலுக்கு முன் கடுமையாகக் குற்றம்சாட்டி வந்தன. ஆயினும், தேர்தலில் இந்த குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளுக்கு எவ்விதப் பலனையும் அளிக்கவில்லை.

மத்திய அரசின் ஒப்பந்தத்துக்கு இணங்க முதல் ரஃபேல் போர் விமானம் அண்மையில் இந்திய விமானப் படையிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் வந்தன., மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் அக்டோபர் 8-ஆம் தேதி பிரான்ஸ் செல்லவுள்ளார். அப்போது முதல் ரஃபேல் போர் விமானம் இந்திய விமானப் படையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்படுகிறது.

மத்திய அரசு மேலும் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்வதன் மூலம், இந்தியா வசம் இருக்கும் ரஃபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 72 ஆக உயர உள்ளன.

அதே நேரத்தில் அமெரிக்காவிடம் இருந்து அழுத்தம் உள்ளதால் எஃப்-21 போர் விமானத்தைக் கொள்முதல் செய்யவும் இந்தியா விரும்புகிறது. மேலும் ரஃபேல் போர் விமானத்துடன் போயிங் எஃப்-18 வாங்கும் திட்டமும் இந்திய விமானப் படைக்கு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், 18 சு-30 எம்கேஐ போர் விமானங்கள் மற்றும் 21 மிக்-29 போர் விமானங்களை ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யவும் இந்திய விமானப் படை முடிவு செய்துள்ளது.   சமீபத்தில் ரஷிய நாட்டுக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி இதற்கானப் பணியைத் துரிதப்படுத்தியிருந்தார்.