திருவனந்தபுரம்: உணவளிக்கும் விவசாயிகளை மத்திய அரசு மதிக்க வில்லை என்று கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் ஒரு மாதத்தை எட்ட உள்ளது. அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடக்கின்றன.

இந் நிலையில் திருவனந்தபுரத்தில் விவசாயிகள் அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொண்டு பேசியதாவது: நம் நாடு பல வரலாற்று போராட்டங்களை சந்தித்து இருந்தாலும், அவற்றில் மிகப் பெரிய போராட்டமாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் விவசாயிகளையும் விவசாயத்தையும் மத்திய பாஜக அரசு மதிக்கவில்லை.  பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையிலான தேசிய விவசாயிகள் ஆணையம் சமர்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை அமல்படுத்துவதாக பாஜக கூறியது.

அவ்வாறு கூறிய பாஜக தான் இப்போது நாட்டை ஆண்டு வருகிறது. தேசிய விவசாயிகள் தினம் இன்று கொண்டாடப்படும் நாளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர் என்று தெரிவித்தார்.