டில்லி

கொரோனா தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் விலை குறித்து மீண்டும் மத்திய அரசு பேச்சு வார்த்தைகள் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்ததால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.  மத்திய அரசு 18 வயதை தாண்டியவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கி உள்ளது.  இதையொட்டி மாநில அரசுகள் வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்ய முயன்று அது முடியாமல் போனது.  தற்போது மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்க உள்ளது.

மத்திய அரசு இதுவரை கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய மருந்துகளைக் கொள்முதல் செய்து வருகிறது.  இவற்றின் ஒரு டோசுக்கான மத்திய அரசின் கொள்முதல் விலை ரூ.150 ஆக உள்ளது.  ஆனால் திருத்தப்பட்ட கொள்கையின் படி ஏராளமான தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்க உள்ளதால் விலையில் மாற்றம் இருக்கலம என எதிர்பார்ப்பு உள்ளது.

எனவே தடுப்பூசி விலைகள் நிர்ணயம் குறித்து கோவாக்சின் உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்ட் உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.  இந்த தகவலை நிதி அயோக் நிறுவன உறுப்பினர் வி கே பால், சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் ஆகியோர் உறுதி செய்யாமல் உள்ளனர்.