டில்லி
குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி கலந்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும் மாநிலங்கள் சார்பாக அமைக்கப்படும், ஊர்திகள் கலந்து கொள்வது வழக்கமாகும். இந்த ஊர்திகளில் அந்தந்த மாநிலங்களில் உள்ள சிறப்புக்கள் இடம் பெறுவது வழக்கமாகும். இந்த ஊர்திகள் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு மாநிலங்கள் அறிவித்து அதன் அடிப்படையில் வாகனங்கள் தேர்வு செய்யப்படும்.
இந்த வருட குடியரசு தின விழா ஊர்வலத்தில் தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு மீது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது. பிரதமர் மோடிக்கு இது குறித்து தமிழக முதல்வ்ர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார் இந்நிலையில் மத்திய அரசு தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
மத்திய அரசு, “மத்திய அரசு இது குறித்து எந்த முடிவும் எடுப்பதில்லை. மாறாக இதற்கென அமைக்கப்பட்ட நிபுணர் குழு முடிவு எடுக்கிறது. இம்முறை மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் உள்ளிட்டோரிடமிருந்து 56 பரிந்துரைகள் பெறப்பட்டன. நிபுணர் குழு அனைத்தையும் பரிசீலனை செய்தது.
நிபுணர் குழு அவற்றில் இருந்து 21 மட்டுமே தேர்வு செய்துள்ளது. மேலும் தமிழகம், கேரளா,மேற்கு வங்கம் ஆகிய ஊர்திகள் குறித்து உரிய விவாதங்கள் நடத்தப்பட்டது. விவாதங்களின் முடிவுக்கு பிறகே நிபுணர் குழு இவற்றை நிராகரித்துள்ளது” என விளக்கம் அளித்துள்ளது.