லங்காநல்லூர்

ன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை பிடித்த கார்த்திக்குக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலக புகழ் பெற்ற  ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டி 8 சுற்றுகளாக நடந்தது.   ஜல்லிக்கட்டில் 1,020 காளைகள் களமிறக்கப்பட்டு 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.  இதில் ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக விளையாடிய 20க்கும் மேற்பட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு 8-வது சுற்றில் அனுமதிக்கப்பட்டனர்.

போட்டி இறுதியில்  21 காளைகளை பிடித்த  கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டார். திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.  அடுத்தாக 19 காளைகளைப் பிடித்த அலங்காநல்லூர்  ராம்குமார், 13 காளைகளைப் பிடித்த சிற்றாலங்குடியைச் சேர்ந்த கோபாலகிருஷணன்  ஆகியோருக்கு விழாக்குழு சார்பில் பைக் பரிசாக வழங்கப்பட்டது.

காளைகளில் புதுக்கோட்டை தமிழ்செல்வன் காளை சிறந்த காளைக்கான முதல் பரிசு பெற்றது  இதன் உரிமையாளர். தமிழ்செல்வனுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் வாகனம் பரிசு வழங்கப்பட்டது.  அடுத்ததாக திருமங்கலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கத்தின் காளை 2-வது சிறந்த காளையாகவும், குலமங்கலம் வழக்கறிஞர் திருப்பதியின் காளை 3-வது சிறந்த காளையாகவும் தேர்வு செய்யப்பட்டது.

இதில் 2-வது சிறந்த காளைக்கு விழாக்குழு சார்பில் பைக்கும், 3-வது சிறந்த காளைக்கு மதுரை மேற்கு ஒன்றிய தலைவர் வீரராகவன் சார்பில் பசுங்கன்றும் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், ஆட்சியர் அனிஷ்சேகர் ஆகியோர் வழங்கினர்.