புதுடெல்லி: அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, நாடெங்கிலும் உள்ள 600 தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கடந்தாண்டு அக்டோபர் முதலே காந்தியடிகளின் 150வது பிறந்த தின கொண்டாட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. அதனடிப்படையில் கடந்த அக்டோபரிலிருந்து இதுவரையான காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 1424 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதன் அடுத்தகட்டமாக, வரும் அக்டோபர் 2ம் தேதி மேலும் 600 கைதிகளை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொலை, பாலியல் பலாத்காரம், சிறார் பாலியல் பலாத்காரம், அன்னிய செலவாணி மோசடி மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம், ஊழல், பயங்கரவாதம் உள்ளிட்ட வழக்குகளில் தண்டனை பெற்றோர் இந்த சலுகையால் பயன்பெற முடியாது.

சிறையில் உள்ள 55 வயதுக்கு மேற்பட்ட பெண் கைதிகள் மற்றும் 60 வயதையும் தாண்டிய ஆண் கைதிகள் ஆகியோர் தங்களுக்கான தண்டனை காலத்தை 50% அனுபவித்திருந்தால், அவர்கள் விடுதலையாகலாம். மேலும் இதேவிதமான சலுகை திருநங்கையருக்கும் பொருந்தும்.

மாற்றுத்திறனாளி கைதிகளும் இந்த சலுகைக்கு உட்பட்டவரே. ஆனால், தூக்கு தண்டனைப் பெற்றோர், மேல்முறையீட்டில் தூக்கானது ஆயுளாக குறைக்கப்பட்டோர் இந்த சலுகையிலிருந்து அப்பாற்பட்டவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.