டில்லி
சீரம் நிறுவனத்துக்கு 7 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை பரவல் சிறிது சிறிதாகக் குறைந்து வருகிறது. விரைவில் மூன்றாம் அலை தாக்குதல் ஏற்படலாம் என மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அதையொட்டி கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நாடெங்கும் தீவிரம் ஆக்கப்பட்டுள்ளன.
இம்முறை சிறார்களுக்கு அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. எனவே மூன்றாம் அலை கொரோனா தாக்குதலை எதிர் கொள்ள சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடுவது அவசியம் ஆகி உள்ளது.
ஏற்கனவே 12 வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அவசரக் கால தடுப்பூசி சோதனைகள் நடந்துள்ளன. இதில் 100 சிறுவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வெற்றி அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவில் முதல் முறையாக சீரம் நிறுவனத்துக்கு 7 முதல் 11 வயதுள்ள சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை நடத்த மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டுக் கழகம் அனுமதி அளித்துள்ளது.