டில்லி:

மோடி அரசு பதவியேற்ற பிறகு, 2015ம் ஆண்டில் சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வ மகள் சேமிப்பு திட்டம்) என்று அறிமுகப்படுத்தியது.

இத் திட்டத்தின்படி, பத்து  வயதுக்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர் குறைந்தபட்சம் ரூபாய் 1000  முதல்  அதிபட்சம் 15 ஆயிரம் ஆண்டுக்கு செலுத்த வேண்டும்.

மொத்தம் 14  வருடங்கள் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆகும்வரை பணம் செலுத்த வேண்டும். இந்தக் கணக்கில்  செலுத்தப்படும் தொகைக்கு வருமானவரிவிலக்கு உண்டு.

முதிர்வு தொகையை 21ஆம் ஆண்டு இறுதியிலோ அல்லது பெண்ணிற்கு 18 வயது நிறைவடையும் போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காகவோ கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பது திட்டம்.

இத்திட்டத்தில் செலுத்தும் தொகைக்கு 9.1 சதவீத வட்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பெண் குழந்தை  உள்ள பெற்றோர் பலரும் இத்திட்டத்தில் சேர்ந்தனர். நிறைவான வட்டி, வருமானவரி இல்லை என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது.

ஆனால் வட்டி விகிதம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 8.4 சதவீத வட்டி மட்டுமே இத்திட்டத்தில் அளிக்கப்படுகிறது. அதாவது ஒரு வருட இறுதியில் சேமிப்பு தொகை ரூ. 65 ஆயிரத்திற்கு ரூ. 800 மட்டுமே வட்டியாக அளிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவு காரணமாக வட்டி குறைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், “பெண் குழந்தைகள் முன்னேற்றத்துக்காக துவங்கப்பட்ட இத்திட்டத்துக்கு விதிவிலக்கு அளித்து வட்டியை குறைக்காமல் இருந்திருக்கலாம். இந்த வட்டி குறைப்பால், இத்திட்டத்தில் புதிதாக கணக்கு தொடங்க மக்கள் தயங்குகிறார்கள். ஆகவே வட்டியை மீண்டும் உயர்த்தி அளிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

மத்திய அரசு கவனிக்குமா?