சென்னை,

சென்னையில் 50 மாடிகள் கொண்ட உயரமான கட்டிடத்தை கட்ட தமிழக  வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டிட பணிகள் தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையின் மையப்பகுதியான  சென்னை நந்தனம் சிக்னல் அருகே அமைந்துள்ள அரசு துறை  கட்டிடமான பெரியார் பில்டிங் எதிரே இந்த கட்டிடம் கட்ட தீட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான வரைப்படம் தமிழக குடிசைமாற்று வாரிய மூத்த அதிகாரிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 50 மாடிகள் கொண்டதாக இந்த கட்டிடம் அமைய உள்ளது. இதில் விசேஷம் என்ன வென்றால், கட்டிடத்தின்  20வது மாடியில் இருந்து எதிர் பக்கம் உள்ள பெரியார் மாளிகைக்கு செல்லும் வகையில் ஆகாய இணைப்பு பாலம் ஏற்படுத்தப்படும் வகையில் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இரு கட்டிடங்களுக்கு இடையே அண்ணா சாலை செல்கிறது.

இதற்கான ஆய்வுபணிகள் மேற்கொள்ளப்பட்டு திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் கட்ட   ரூ.750 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம்  மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் டவரை போன்ற வடிவமைப்புடன், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும் என கூறப்படுகிறது.

சுமார் 25லட்சம் சதுரஅடியில் கட்டப்படும் இந்த கட்டிடம், தற்போது சென்னையில் உள்ள ஹிரனன்தானி கட்டிடத்தை விட உயரமான கட்டிடமாகவும்,  சென்னையில் உயர்ந்த கட்டிடமாகவும்  இருக்கும்.

இந்த கட்டிடத்தில் உளள அறைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார்களுக்கு வாடகைக்கு விடப்படும் என்றும், அதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் 240 கோடி ரூபாய் வருவாய் ஈட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கட்டிடத்தை காண தமிழக மக்களும் ஆவலாக உள்ளனர். விரைவில் பணி தொடங்கட்டும்…