டெல்லி: தமிழ்நாட்டுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.9,602 கோடி உள்பட  மாநிலங்களுக்கு மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.86,912 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது மே 31- ஆம் தேதி வரையிலான இந்த இழப்பீட்டுத் தொகை என தெரிவித்துஉள்ளது.

மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை வழங்கப்படாதது குறித்து  பல மாநிலங்கள் குற்றம் சுமத்தி வந்தன. மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் முன்னிலையிலேயே ஜிஎஸ்டி இழப்பீடு குறித்து பேசினார். இது சர்ச்சையானது. இந்த நிலையில், மத்திய அரசு தற்போது நிலுவையின்றி அனைத்து தொகையையும் முழுமையாக விடுவித்துள்ளது.

இதுதொடர்பாக  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தற்போது மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ. 25,000 கோடியாக உள்ளது. இருப்பினும் மாநிலங்களின் மூலதனச் செலவுகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் கூடுதல் வரி மூலம் மற்றும் சொந்த நிதி ஆதாரங்களிலிருந்தும் ரூ. 61,912 கோடியையும் சேர்த்து விடுவிப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது, மாநிலங்களுக்கு ஏற்படும் வரி வருவாய் இழப்பீட்டை ஈடுகட்ட அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க சட்டம் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், இந்த வரி இழப்பீட்டை மாநிலங்களுக்கு கூடுதலாக வழங்க மத்திய அரசு மேலும் நிதி ஆதாரங்களுக்கு சில சரக்குகளில் கூடுதல் வரி (செஸ்) விதித்து மாநிலங்களின் வருவாயை மத்திய அரசு பாதுகாத்தது. இது கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2017-18, 2018-19 நிதியாண்டுகளில் குறிப்பிட்ட நேரத்தில் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கொரோனா நோய்த் தொற்றால் மத்திய அரசுக்குரிய கூடுதல் வரி அதிகரிக்கவில்லை என்பதுடன், கூடுதல் வரி வருவாயில் வீழ்ச்சியும் ஏற்பட்டது. இந்த வீழ்ச்சிக்கான இடைவெளியை நிரப்பவும், மாநில அரசுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுக்காக நிதி ஆதாரங்களின் இடைவெளியைப் போக்கவும் வெளிச்சந்தையில் மாநிலங்கள் கடன் பெற மத்திய அரசு அனுமதித்தது.

பின்னர், அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்ட நிலையில், கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ. 1.1 லட்சம் கோடி, 2021-22 நிதியாண்டில் ரூ.1.59 லட்சம் கோடி என சந்தையில் கடனைப் பெற்றுக் கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதுதவிர வழக்கமான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையையும் மத்திய அரசு விடுவித்து வந்தது  ஆனால், நிகழாண்டில் ஜிஎஸ்டி வரி, கூடுதல் வரி வருவாய் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதை முன்னிட்டு கடந்த நிதியாண்டிற்கும் நடப்பு நிதியாண்டி

ற்கும் வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையின் நிலுவைத் தொகையை முழுமையாக உடனடியாக வழங்க மத்திய அரசு முன் வந்துள்ளது. இதன்படி சரக்கு சேவை வரியின் இழப்பீட்டை பெறும் 21 மாநிலங்களுக்கு கடந்த ஜனவரி 2022 வரையிலான தொகை ரூ.47,617 கோடி; 2022, பிப்ரவரி-மார்ச் ஆகிய மாதங்களுக்கு ரூ. 21,322 கோடி; இறுதியாக ஏப்ரல் – மே மாதங்களுக்கு ரூ.17,973 கோடி என மே 31-ஆம் தேதி வரை மொத்த நிலுவைத் தொகை ரூ. 86, 912 கோடியாக கணக்கிடப்பட்டது. இந்தத் தொகை முழுமையாக இந்த மாநிலங்களுக்கு செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது

இதில், மகாராஷ்டிர மாநிலத்தை (ரூ. 14,145 கோடி) அடுத்து தமிழகம்தான் அதிக அளவாக ரூ. 9,602 கோடி பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களில் உத்தர பிரதேசம் ரூ. 8,874 கோடி, கர்நாடகம் ரூ. 8,633 கோடி, தில்லி ரூ. 8,012 கோடி பெற்றுள்ளது.

இதில் தமிழக அரசு தரப்பில் ரூ.11,600 கோடி வரை எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன் கணக்கீட்டின்படி ரூ.9,602 கோடி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.