டெல்லி: ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களைத் தவிருங்கள் என சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.   வெளிநாட்டு ஆன்லைன் பந்தயம், சூதாட்ட தளங்களின் விளம்பரங்களைத் தவிர்க்குமாறு சமூக ஊடக நிர்வாகத்தினரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுக்கள் பலர் பணத்தை இழந்து தற்கொலை முடிவை நாடுகின்றனர். அதுபோல இளைஞ்சிறார்களும் ஆன்லைன் விளையாட் டுக்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.  விபரீதத்தை விளைவிக்கும் ஆன்-லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் பாதிக்கப்படாமல் தடுக்க, அவர்களது மன ஆரோக்கியத்தை செம்மைப்படுத்துவது பெற்றோரின் கடமை, அவர்களை கண்காணிக்க வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இருந்தாலும், வருமானத்தையும், நாட்டின் பொருளாதாரத்தை  குறிக்கோளாக கொண்டு, ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு கட்டுப்பாடுகளுடன் மத்தியஅரசு அனுமதி வழங்கி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆன்லைன் விளையாட்டுக்காக பிரபல நிறுவனங்கள் சார்பாக திரையுலகினர், விளையாட்டு துறை வீரர்கள் விளம்பரம் செய்வதும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், ஆன்லைன் பந்தயம், சூதாட்ட தளங்களின் விளம்பரங்களைத் தவிர்க்குமாறு சமூக ஊடக நிர்வாகத்தினரை மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த விளம்பரங்கள் நுகர்வோர் மீது, குறிப்பாக இளைஞர்கள் மீது ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் குறிப்பிடத்தக்க நிதி மற்றும் சமூக-பொருளாதார தாக்கங்களைக் கொண்டுள்ளன என்று அமைச்சகம் கூறியுள்ளது.

இதுபோன்ற விளம்பரத்தின் மூலம் இந்திய பார்வையாளர்களை இலக்காகக் கொள்ளவேண்டாம் என்று ஆன்லைன் விளம்பர இடைத்தரகர்களுக்கு அமைச்சகம் மேலும் அறிவுறுத்தியுள்ளது. இதை மீறினால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் விதிகளின் கீழ் சமூக ஊடக இடுகைகள் அல்லது கணக்குகளை அகற்றுவது அல்லது முடக்குவது மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்களின் கீழ் தண்டனை நடவடிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளது.