சென்னை: கோவில்களுக்குள் செல்போன் எடுத்துச்செல்வது தொடர்பாக தமிழ்நாடு அறநிலையத்துறைக்கு உயர்நீதி மன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.
சமீப நாட்களாக பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறை புகைப்படம் மற்றும்வீடியோக்கள் வைரலானது. இது ஆகமவிதிமுறைகளை மீறிய செயல் என்று கண்டனம் எழுந்தது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில், வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்தாதிருந்தார்.. அவரது மனுவில், பழனி தண்டாயுதபாணி கோவில் கருவறைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்த அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் ஆதிகேசவலு அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, இது சம்பந்தமாக கோவில் இணை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து விசாரணைக்கு நேரில் ஆஜரான, பழனி தண்டாயுதபாணி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து ஆஜராகி, கோவிலுக்குள் செல்போன்களை கொண்டு சொல்லக்கூடாது என அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளதாக விளக்கம் அளித்தார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கோவில்களுக்குள் செல்போன் போன்ற கருவிகளை எடுத்துச் செல்ல தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை அமல்படுத்தா தது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கருவறைக்குள் புகைப்படம் எடுக்க அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவித்தனர்.
மேலும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், திருப்பதி கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல முடியாதது, அதைப் போல தமிழகத்தில் ஏன் அமல்படுத்தக் கூடாது என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அறநிலையத் துறை தரப்பு வழக்கறிஞர், கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடுத்து, 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் நிரந்தர கட்டமைப்பை ஏற்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், பக்தர்கள், அதிகாரிகள் என எவரும் கோவிலுக்குள் செல்போன் எடுத்துச்செல்வதை தடுக்க வேண்டும் என்றும், மீறி செல்போன் கொண்டு வருபவர்களை மலையில் இருந்து இறக்கி விடுங்கள் எனத் தெரிவித்த நீதிபதிகள், பழனி கோவிலில் எந்தெந்த இடங்களில் கண்காணிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த உள்ளது என்பது குறித்து வரும் வெள்ளிக் கிழமைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தி, இரு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.