புதுடெல்லி: 
75-வது சுதந்திர தினம் கொண்டாட்டத்தை முன்னிட்டு  செங்கோட்டைச் சுற்றிப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
75-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது.  இதை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியைப் பிரதமர் நரேந்திர மோடி  ஏற்றுவார். ​​
இந்நிலையில், செங்கோட்டைப் பகுதியில் பாதுகாப்பின் கீழ், சுமார் 9 ட்ரோன் ரேடார்கள் மூலம் கண்காணிக்கப்படும். இதனுடன், ஒவ்வொரு செயல்பாடும் சுமார் 300 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். பாதுகாப்பு அமைப்பில் 5000 க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
தேசிய தலைநகரம் ​​டெல்லி முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுவார்கள். முன்னெச்சரிக்கையாக டெல்லியின் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. சில இடங்களில் பலத்த பாதுகாப்பு மற்றும் சோதனை தொடங்கப்பட்டுள்ளது. சுதந்திர தின விழாவில் பங்கேற்க வரும் ஒவ்வொரு பார்வையாளரும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்.
இந்த பாதுகாப்பு ஏற்பாட்டில், காவல்துறை தவிர, துணை ராணுவப் படைகள், என்எஸ்ஜி கமாண்டோக்கள், எஸ்பிஜி பணியாளர்கள் மற்றும் உயர் கட்டிடங்களில் ஸ்நைப்பர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அரசு கட்டிடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.